என் மலர்
தமிழ்நாடு
உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா?.. திமுக பவள விழாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு
- திமுக பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
- உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா என முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு
தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..
தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில், முன்னாள் எம்.பி. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் விருது வென்றவர்கள் சார்பில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தி.மு.க வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்.
"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா..? உங்களை (மு.க.ஸ்டாலின்) பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக்கொண்டதைப்போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்று தெரிவித்தார்.