search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: அண்ணாமலை கோரிக்கை
    X

    கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: அண்ணாமலை கோரிக்கை

    • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது.

    தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:

    தமிழகத்தில் சாராயம் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்தபோது இந்த மரணம் விஷ சாராயத்தின் கடைசி மரணம் என்றார் முதல்வர்.

    மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    மதுவை ஒழிப்போம் என்றார்கள், ஆனால் டாஸ்மாக் கடையில் வியாபாரம் அதிகரித்து வருகிறது.

    உடனடியாக 1000 டாஸ்மாக் கடைகளை நாளைய தினமே மூட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை. பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்தித்திருக வேண்டும்.

    விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது.

    விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை.

    விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.

    குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை; நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. சார்பில் முடிந்தவரை தேவையான உதவிகளை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×