என் மலர்
தமிழ்நாடு
எம்.ஜி.ஆர். வழியில் அரசியலுக்கு வந்த "கருப்பு எம்.ஜி.ஆர்."
- விஜயகாந்தின் வெற்றி தேர்தல் களத்தில் புதிய மாற்றமாகவே பார்க்கப்பட்டது.
- ஜெயலலிதா முதலமைச்சரான நிலையில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார்.
மக்கள் திலகம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வழியில் அரசியலுக்கு வந்த கருப்பு எம்.ஜி.ஆர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆவார்.
எம்.ஜி.ஆர். வழியில் அரசியல் களம் கண்டு வெற்றி வாகை சூடி சாதித்து காட்டியவரும் அவர்தான். இவரை போன்று மற்ற நடிகர்கள் யாரும் அரசியலில் ஜெயிக்கவில்லை.
தமிழ் திரை உலகில் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தனது ரசிகர் மன்றங்களை வலுவாக்கி வைத்திருந்தார்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவுடன் அரசியல் களத்துக்கு வருவதற்கு அது அவருக்கு உதவியாக இருந்தது.
இதன்படி ரசிகர்களை ஒருங்கிணைத்து அவர் அ.தி.மு.க.வைதொடங்கி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். அவரது வழியிலேயே விஜயகாந்த் தனது ரசிகர் மற்றும் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார்.
கட்சி தொடங்கிய முதல் ஆண்டிலேயே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை துணிச்சலுடன் சந்தித்தார். இந்த தேர்தலில் 10 சதவீத வாக்குகளை அவர் அள்ளினார். விஜயகாந்தின் இந்த வெற்றி தேர்தல் களத்தில் புதிய மாற்றமாகவே பார்க்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே அவர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு விஜயகாந்த் முக்கிய காரணமாக விளங்கினார். இதன் காரணமாகவே 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது.
ஜெயலலிதா முதலமைச்சரான நிலையில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். இப்படி அரசியல் களத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வெற்றி கொடிய நாட்டியவர் விஜயகாந்த் என்று கூறினால் அது மிகையாகாது.
2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனது செல்வாக்கு என்ன என்பதை நிலைநாட்டிய பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அவர் வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றியே விஜயகாந்தின் கடைசி வெற்றியாகவும் மாறிப்போனது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை தேர்தலிலும் விஜயகாந்தால் வெற்றி பெற முடியவில்லை. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலுமே விஜயகாந்த் தோல்வியைத் தழுவினார். 2016-ம் ஆண்டில் மக்கள் நல கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன் நிறுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த தேர்தல் வரையில் தான் பிரசாரம் சுற்றுப்பயணம் என தனது வழக்கமான சுறுசுறுப்புடன் காணப்பட்ட விஜயகாந்த் அதன்பிறகு உடல்நலக்குறைவால் தள்ளாடினார். இப்படி அரசியலில் ஏற்ற இறக்கங்களைக் கண்ட விஜயகாந்த் கடைசி வரையில் நல்ல மனிதராகவே வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.