என் மலர்
தமிழ்நாடு
செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கனஅடி தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்தது.
புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக அதிகரிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2862 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 400 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.