search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகையில் கள ஆய்வு: அரசின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
    X

    நாகையில் கள ஆய்வு: அரசின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

    • இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது
    • வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் பங்கேற்றார்.

    2-ம் நாளான நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கொலை, கொள்ளை, திருட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில் 3-ம் நாளான இன்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், மத்திய மாநில அரசுகளின் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (நாகை), தீபக்ஜேக்கப் (தஞ்சை), சாருஸ்ரீ (திருவாரூர்), மகாபாரதி (மயிலாடுதுறை) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், துறை சார்ந்த அரசு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள், செய்ய வேண்டிய பணிகள், செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி மண்டல வாரியாக ஆய்வு நடத்தி வருகிறேன். இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மக்களை தேடி மருத்துவம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள், கனிகள் உற்பத்தி அதிகரிப்பதற்காக வழிமுறைகளை ஆராய வேண்டும்.

    இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. அதனை உயர்த்த நடவடிக்கை தேவை. விளைபொருட்களுக்கு உரிய சந்தை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். சந்தை வசதிகளை பெருக்க வேண்டும்.

    வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேளாண் திட்டங்களோடு இல்லாமல் அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பட்டா மாறுதல், பட்டா திருத்தம் போன்றவற்றிற்காக சான்றிதழ் வழங்குவதில் தாமதம் இருக்க கூடாது.

    6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலன் கருதி ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே இந்த குறைகளை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது வேதனை அளிக்கிறது. இனி வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் அதிகளவிலான மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டங்களில் நடந்து வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட நிர்வாகமும், தலைமை செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.

    அரசின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எனவே பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாங்கண்ணிக்கு சென்று மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூருக்கு செல்கிறார்.

    இன்று இரவில் திருவாரூரில் உள்ள அவரது வீட்டில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை) திருவாரூரில் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×