என் மலர்
தமிழ்நாடு
1,646 பேர்களுக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
சென்னை:
இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சுப் பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
172 உதவியாளர் பணியிடத்திற்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆலோசகர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு புனர்வாழ்வு மற்றும் மருத்துவ நிலையத்தில் பணிபுரிவர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.