என் மலர்
தமிழ்நாடு
என் பெயர் தெரியுமா?: காலை உணவு சாப்பிட்ட மாணவ-மாணவியிடம் முதலமைச்சர் சுவாரசிய பேச்சு
- நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள்.
- ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறினார். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் ஹரி என்று பதில் அளித்தான். கையில் வாட்ச் கட்டி இருக்கிறாய். டயம் பார்க்க தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் வாட்ச் தப்பா போகுது என்றான்.
இடது புறம் இருந்த மாணவியிடம் உன் பெயர் என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அந்த மாணவி சுதர்சனா என்று கூறினாள். என்ன படிக்கிறாய் என்றதற்கு 3-ம் வகுப்பு என்றாள்.
தினமும் வீட்டில் காலையில் சாப்பிடுவாயா? பள்ளிக்கு வரும்போது சாப்பிடுவியா? என்று கேட்டதற்கு அந்த மாணவி ஆமாம் என்றார்.
உங்க அப்பா அம்மா பெயர் என்ன? என்ன செய்கிறார்கள்? தம்பி எங்கே என்றார். அதற்கு அவள் பதில் அளித்ததும் சரி சாப்பிடு என்றார்.
முதலில் சுவீட் சாப்பிடு என்றார். தினமும் பள்ளிக்கு வருவியா? என்றும் பேசினார்.
நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள். சி.எம். என்பது பதவி. என் பெயர் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, பதில் சொல்ல தயங்கினாள். உடனே மாணவனிடம் அதே கேள்வியை கேட்டார். அவனும் முதலில் சி.எம். என்று பதில் அளித்தான். அதன் பிறகு ஸ்டாலின் என்று கூறினான்.
பள்ளிக்கு தினமும் வந்து விடுவாயா? சாப்பாடு நன்றாக உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். உடனே அந்த மாணவன் மற்றொரு மாணவனிடம் 'ஐயா சாப்பிடுவதை பார்' என்று கூறினான்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியிடம், நீ எந்த ஊரில் இருக்கிறாய். இந்த ஊர் யாருடைய ஊர் தெரியுமா? எங்க அப்பா பெயர் தெரியுமா? கலைஞர் தெரியுமா? என்று கேட்டார்.
அந்த மாணவி யோசித்தபோது "கலைஞர்தான் என் அப்பா" என்றும் எடுத்துச் சொன்னார்.
ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
மதியம் லஞ்ச் எங்கே சாப்பிடுவாய் என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். உடனே மாணவன் அணிந்திருந்த வாட்சை பார்த்து வாட்ச் ஓடவில்லை படம் பார்ப்பியா? என்றார். அதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசினான். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அணிந்திருந்த வாட்சை காண்பித்து இதில் என்ன டயம் என்று சொல் என்றார்.
தம்பி என் வாட்சை பார் டயம் என்ன என்று மீண்டும் கேட்டார். இப்போது சொல் டயம் பார்க்க தெரிகிறதா? என்றார். அதற்கு அந்த மாணவன் சொன்ன பதிலை கேட்டு சிரித்தார்.