search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

    • பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.
    • ராணிப்பேட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் காஞ்சிபுரம் வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பலமுறை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் மாநில அரசே நிதி மேலாண்மை செய்ய வேண்டும் என்று உள்ளதாக நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

    இதனால் தான் மத்திய அரசு இதுவரை பணம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடும் தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த பணமும் கிடைக்காமல் உள்ளது.

    இந்த நிதியையும் உடனே விடுவிக்குமாறு தமிழக அரசு பல தடவை கோரிக்கை வைத்தது. அமைச்சர் மற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று கேட்டும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டது.

    இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலையில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் 27-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். அப்போது விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார். அடிக்கல் நாட்டுகிறார்

    பிரதமரை சந்தித்து முடித்ததும் அன்று மாலையே (27-ந் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    அதன் பிறகு 28-ந் தேதி (சனிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9 ஆயிரம் கோடியில் அமைய இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    ராணிப்பேட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் காஞ்சிபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் தி.மு.க. பவள விழா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    Next Story
    ×