என் மலர்
தமிழ்நாடு
கார் வெடிப்பு வழக்கு- முபின் வீட்டிற்கு 4 பேரை அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
- என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
- முபின் வீட்டில் சந்தேகித்திற்கிடமான பொருட்கள் இருந்துள்ளது.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.
இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கினை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக சென்னையில் வைத்து விசாரித்து வந்தனர்.
நேற்று அவர்கள் 6 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரித்தனர்.
இந்த நிலையில் 6 பேரில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தவுபிக் ஆகிய 4 பேரை மட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது முபின் வீட்டில் சந்தேகித்திற்கிடமான பொருட்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த அதிகாரிகள் அது தொடர்பாகவும் 4 பேரிடமும் விசாரித்தனர்.
தொடர்ந்து 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி.எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த காட்சிகள் அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.