என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/12/23/1996598-nellaicollector.webp)
தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது.
- கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் ஆற்றில் குளிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது.
எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.
எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளுக்குள்ளும் இறங்க வேண்டாம். மேலும் கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதேபோல், பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.
விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக்கொண்டு உள்ளதா?, அறுந்துள்ளதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே மக்கள் செல்ல வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.