என் மலர்
தமிழ்நாடு
மகாளய அமாவாசையையொட்டி திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
- கோவில் குளம் மற்றும் காக்களூர் ஏரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- ஆதி அத்திவரதர் சயன குளத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இக்கோயிலில் தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று மகாளய அமாவாசை வந்துள்ளது. இதனால் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளம் மற்றும் காக்களூர் ஏரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலுக்கு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.
இன்று காலையிலேயே அவர்கள் கோவிலுக்கு வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதையொட்டி திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் திருவள்ளூர் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.
காஞ்சிபுரத்தில் மகாளய அமாவாசையையொட்டி கோவில் குளக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த சாந்தால் ஈஸ்வரர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் நின்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோன்று ஆதி அத்திவரதர் சயன குளத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசையையொட்டி பொன்னேரி பகுதியில் உள்ள சிவன் கோவில் தெப்ப குளக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று அதிகாலை முதலே பொன்னேரி கிருஷ்ணாபுரம், மெதூர், பழவேற்காடு, பெரியமனேபுரம், ஆலாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.