search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாமியாரின் உருவபொம்மையை எரித்து திராவிட தமிழர் கட்சியினர் போராட்டம்: நெல்லையில் பரபரப்பு
    X

    சாமியாரின் உருவபொம்மையை எரித்து திராவிட தமிழர் கட்சியினர் போராட்டம்: நெல்லையில் பரபரப்பு

    • திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது.
    • திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

    இதனை கண்டித்து திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கே குவிக்கப்பட்டனர்.

    அப்போது திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அங்கே ஓடி வந்து போலீசார் தடுப்பதற்குள் உருவ பொம்மை முழுவதுமாக எரிந்து விட்டது.

    இதையடுத்து போலீசார் திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×