என் மலர்
தமிழ்நாடு
டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி- பரபரப்பு பின்னணி
- டெல்லியில் மோடி, அமித் ஷாவை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்தார்.
- அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினைகளை பா.ஜனதா மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது.
அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்துகொண்டார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். அதாவது நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் ஆகியவற்றை எடுத்து சொல்லி பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி பா.ஜனதா ஆதரவையும் பெற்றுவிட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் தனது பயண திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடி, அமித்ஷா இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே திரும்புகிறார். அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது புதிய தகவல்கள் வெளியானது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
மோடியின் குட் புக்கில் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். எனவே அவரை சந்திக்க மோடி நிச்சயம் நேரம் ஒதுக்கி கொடுத்து இருப்பார்.
மோடிக்கு தொடர் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பியிருந்தால் எடப்பாடி பழனிசாமி நாளை வரை டெல்லியில் தங்கி இருந்து இருப்பார். அவர்களை சந்திக்காமல் தவிர்த்ததற்கு வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.
அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினைகளை பா.ஜனதா மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சகிகலா ஆகியோர் தனித்தனியாக இயங்குவதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ரகசியமாக கேட்டறிந்து வருகிறார்கள்.
தற்போதைய சூழலில் இந்த பிரிவுகள் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும். இதே பிளவுகளுடன் 2024 பொது தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றியை பாதிக்கும் என்று மோடியிடமும், அமித் ஷாவிடமும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கணிப்பாளர் ஒருவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
பா.ஜனதா தலைவர்களின் மனநிலையை டெல்லியில் தங்கியிருந்த போது எடப்பாடி பழனிசாமி கேள்விப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடி, அமித்ஷாவை சந்திக்க செல்லும் போது அவர்கள் இப்படி ஒரு யோசனையை தெரிவித்தால் தேவையற்ற தர்ம சங்கடத்தை உருவாக்கும். எனவே அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதே நல்லது என்று கருதி இருக்கிறார்.
எனவே தான் சாமர்த்தியமாக மோடி, அமித்ஷாவை ஜனாதிபதி பிரிவு உபசார விழாவின் போது சந்தித்து விட்டு, புதிய ஜனாதிபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்னைக்கு திரும்புகிறார்.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.
பெருவாரியான நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவை தன்வசப்படுத்தி இருக்கும் நிலையில் இதே வேகத்தில் கட்சியை கொண்டு செல்லவே விரும்புகிறார்.
மீண்டும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்ப்பது பா.ஜனதாவுக்கு ஒருவேளை ஆதாயமாக இருந்தாலும் தமிழகத்தில் தன்னால் அரசியல் செய்யமுடியாது என்பதால் இந்த திட்டத்தை எக்காலத்திலும் ஏற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.