என் மலர்
தமிழ்நாடு
அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கே திமுகவில் பதவி- எடப்பாடி பழனிசாமி
- திமுகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை.
- திரைத்துறையில் கூட கமிஷன் வாங்கும் கட்சியாக திமுக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் பிற கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு பதவி கொடுக்கின்றனர். தி.மு.க.வில் உழைப்புக்கு மரியாதை இல்லை. அதனால் அது தேய்ந்து வருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது உயிர் உள்ளவரை மக்களுக்காக உழைத்தனர். ஆனால் தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
விரைவில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் திரைப்படத்தில் நடிப்பது அவர்களின் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றத்தான். திரைத்துறையில் கூட கமிஷன் வாங்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது. இவர்கள் அரசியலில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் யாரையும் விடவில்லை.
மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3-ல் ஒரு பகுதி நாட்கள் முடிந்து விட்டன. இதனால் மக்கள் என்ன பயன்பெற்றனர்? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் சாதனை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவற்றையும் இந்த ஆட்சியில் கைவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.