என் மலர்
தமிழ்நாடு
வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள்: அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு
- மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.
- குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இருக்கை வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் 19-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து அரசுச் செயலாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவியாளர் மேஜை, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின்சார இணைப்பு வசதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.
15X15 அடி அளவில் துணிப்பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும். குறிப்பாக, குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இந்த வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டனர். மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் சுகாதாரத்தை பேணுவதற்காக தகுந்த உத்தரவுகளை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளுக்கு எண் அளித்தல், 200 மீட்டர் எல்லைக்கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்புகளை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.