என் மலர்
தமிழ்நாடு
ஈ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்- அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
- அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை.
- ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தீர்மானக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருகை
சென்னை:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் தனியாக ஆலோசனை நடத்தினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இது ஒருபுறமிருக்க அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை நடத்திவருகின்றனர். தீர்மான குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தீர்மானக் குழு கூட்டத்திற்கு வந்த அவர், கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் பகுதி செயலாளரான மாரிமுத்துவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. ரத்தக்கறையுடன் அவர் உடனடியாக தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். தாக்குதல் நடத்தியது வெளிநபர் என அவர் கூறியிருக்கிறார். தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஜெயக்குமார் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.