என் மலர்
தமிழ்நாடு
விலை குறையாததால் மக்கள் விரக்தி- தக்காளி தோட்டத்தை காவல் காக்கும் விவசாயி
- திண்டுக்கல், பழனி உழவர்சந்தையிலேயே 1 கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.
- தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வருடத்தின் பெரும்பகுதி நஷ்டம் ஏற்படுகிறது.
வடமதுரை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறையாமல் கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாகி வருகிறது. தக்காளியை தொடர்ந்து வெங்காயம், கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் போன்ற அத்தியாவசிய காய்கறிகளும் கிலோ ரூ.100க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து ரூ.30 முதல் ரூ.40 வரை காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டாலும், வியாபாரிகள் 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் விலை வைத்து விற்பதால் பொதுமக்கள் அதிக அளவு சுமையை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரேசன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம் மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கே 1 கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 வரை குறைந்து உள்ளது. சில்லரை கடைகளில் பொதுமக்கள் வாங்கும்போது 1 கிலோ ரூ.140 வரை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் தக்காளியை குறைத்துக்கொண்டு மாற்று பொருளை பயன்படுத்தும் நிலைக்கு மாறிவருகின்றனர்.
திண்டுக்கல், பழனி உழவர்சந்தையிலேயே 1 கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியை போன்றே கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளும் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேல் காய்கறிகள் விலை குறையாத நிலையில் இந்த விலையேற்றம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது தக்காளி நாற்றுகளை பாவி வைத்துள்ளனர். இவை செடிகளாகி அறுவடைக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும். ஏற்கனவே தக்காளி செடியை நட்டு அறுவடை செய்து வருபவர்கள் தோட்டத்தில் தக்காளி திருடு போகாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர். பல இடங்களில் இரவு நேரங்களில் தோட்டத்தில் புகுந்து தக்காளி திருடு போவதால் இதுபோல காவல்காத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கண்டமநாயக்கனூரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி ராமசாமி தெரிவிக்கையில்,
தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வருடத்தின் பெரும்பகுதி நஷ்டம் ஏற்படுகிறது. லாபம் கிடைக்கும் நேரத்தில் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விளைச்சல் அதிகம் உள்ள காலங்களில் அதனை பதப்படுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.