search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
    X

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

    • மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    தஞ்சையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேப்போல் கும்பகோணம், ஒரத்தநாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தண்ணீரை கடந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் மழை நீர் வடிய அரசு வடிகால் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×