search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கார் மரத்தில் மோதி தந்தை-மகன் பலி: சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பியபோது பரிதாபம்

    • அதே வேகத்தில் சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
    • புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இரணியல்:

    களியக்காவிளையை அடுத்த பனச்சமூடு அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் அருண்சாம் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி அக்ஸா (28). இவர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் ஈஸ்டர் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டனர். இதற்காக அருண்சாம், மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து வர தாம்பரம் சென்றார்.

    நேற்று காலை அவர் குடும்பத்தினருடன் தாம்பரத்தில் இருந்து ஊருக்கு காரில் புறப்பட்டார். காரை அருண் சாம் ஓட்டினார். அவரது மனைவி அக்ஸா மற்றும் அருண் சாமின் தந்தை ரசலையன் (56), தாயார் சரோஜா மற்றும் உறவினர் அகில் (25), அட்ரியன் (2) ஆகிய 6 பேர் இருந்தனர்.

    நள்ளிரவு 11.30 மணிக்கு கார் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் அருண்சாமின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது முன் இருக்கையில் இருந்த அருண்சாம், ரசலையன் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தனர்.

    அவர்களை பொதுமக்கள் பலத்த சிரமத்திற்கிடையே வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் அருண்சாம், அவரது தந்தை ரசலையன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது தெரியவந்தது.

    விபத்தில் படுகாயம் அடைந்த அக்ஸா, சரோஜா, அகில் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் தந்தை, மகன் பலியானது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியான அருண் சாம், ரசலையன் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. விபத்து குறித்து பால்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் சிக்கி தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×