search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவர் மாநாட்டில் 13,244 பயனாளிகளுக்கு ரூ.70.76 கோடி நலத்திட்ட உதவி: முதலமைச்சர் வழங்கினார்
    X

    மீனவர் மாநாட்டில் 13,244 பயனாளிகளுக்கு ரூ.70.76 கோடி நலத்திட்ட உதவி: முதலமைச்சர் வழங்கினார்

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் நேற்று ராமநாதபுரம் அருகே தேவிபட்டிணம் சாலையில் பேராவூரில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    அப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வியூகங்கள் குறித்தும் அவர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    மேலும், தேர்லில் வெற்றி பெற்றால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள்மடம் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்புகளுக்கு சென்றார். அங்கு மீனவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதையடுத்து ராமேசுவரம் சென்ற அவர் இரவில் அங்கு தனியார் ஓட்டலில் தங்கினார். மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதற்காக ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கலோனியர் பங்களாவில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனியார் விடுதியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட அவர் உற்சாகமாக கையசைத்தவாறு வந்தார்.

    வரும் வழியில் ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கனிமொழி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர்.

    இதையடுத்து மீனவர் நல மாநாடு நடைபெறும் பகுதிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீனவர் நலம், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு முதலே மீனவர்கள் சாரை சாரையாக மண்டபத்திற்கு வருகை தந்தனர்.

    அதேபோல், நலத்திட்ட உதவிகள் பெறும் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.

    மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ரூ.24 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 315 மதிப்பீட்டிலும்,

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் சூரை மீன்படகு கட்டுதல் மற்றும் திட்டங்கள், கிசான் கடன் அட்டை, கடற்பாசி வளர்ப்பு, மீனவர் நல வாரிய அட்டை ரூ.9 கோடியே 92 லட்சத்து 80 ஆயிரத்து 294 மதிப்பீட்டிலும்,

    சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் 1 பயனாளிக்கு புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் மூலம் 1,152 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் கே.சி.சி. கடற்பாசி வளர்ப்பு கடன் ரூ.5 கோடியே 43 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும்,

    மகளிர் திட்டம் துறையின் மூலம் 6,608 பயனாளிகளுக்கு கூட்டுப் பொறுப்பு குழுக்கடன் மகளிர் சுய உதவிக்குழு கடன், துயர் குறைப்பு நிதியாக ரூ.30 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.

    அப்போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுதல், வாழ்வாதாரம் காத்தல், மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குதல், அவர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தி விவாதித்தார்.

    Next Story
    ×