என் மலர்
தமிழ்நாடு
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
- கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் சுவற்றின் மீது மோதி நின்றது.
- விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் சுவர் பலத்த சேதமடைந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன்.
இவர் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.
கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இருந்தாலும் ஓ.எஸ்.மணியன், டிரைவர் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றனர்.
இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.