என் மலர்
தமிழ்நாடு

டவுன் பள்ளியில் மழை நீர் தேங்கி சகதியாக உள்ள இடத்தில் மாணவிகள் நடந்து செல்லும் காட்சி.
நெல்லை, தென்காசியில் பயங்கர இடி-மின்னலுடன் கன மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு

- மூலக்கரைப்பட்டி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நெல்லையில் மாலை நேரத்தில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று இரவில் பெரும்பாலான இடங்களில் பயங்கர சத்தத்துடன் வானில் இடி முழங்கின. அதிக அளவில் மின்னலுடன் கனமழை தொடர்ந்து நீடித்ததால் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருளில் மூழ்கின.
மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 43 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வி.கே.புரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பெய்த கன மழையால் ஒரே நாள் இரவில் பெரும்பாலான சிறிய அளவிலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூலக்கரைப்பட்டி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
மாநகர பகுதியில் பெய்த மழையால் இன்று காலை பெரும்பாலான பள்ளி வளாகங்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் மாணவ-மாணவிகள் உள்ளே நடந்து செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். டவுன் வடக்கு ரதவீதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை மோட்டார் மூலம் உறிஞ்சினர்.
அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 91.60 அடியை தொட்டது.
ஏற்கனவே கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 9 அடி அதிகரித்த நிலையில் இன்று மேலும் 6 அடி உயர்ந்து 105.64 அடியாக அதிகரித்துள்ளது. இந்த அணைகளுக்கு தற்போது வினாடிக்கு 2850 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78 அடியை நெருங்கி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் லேசான வெயில் அடித்த வண்ணம் இருந்தது. மாலை 7 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கி சுமார் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இரவு 10 மணி அளவில் பயங்கர இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக இரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், இன்று காலை வரை வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான கிராமங்களில் பொதுமக்கள் அவதியடைந்தனர். இரவு முழுவதும் பெய்த மழையால் சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை வரையிலும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் வேகம் குறையாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஆனாலும் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவிக்க வந்ததால் அவர்கள் மட்டும் மெயினருவியில் ஒரமாக நின்று குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் குளிப்பதற்கு இன்று காலையிலும் தடை நீடித்தது.