என் மலர்
தமிழ்நாடு
பலத்த மழை- காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு
- சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
- ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 4 மணிக்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, ஆர்.கே.வி.ரோடு, சக்தி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கின்றது.
இந்த திடீர் மழையால் ஈரோட்டில் மேடன பகுதியான சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளநீர் நாடார் மேடு பகுதி நோக்கி பாய்ந்து சென்றது. இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் தாழ்வாக உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வீட்டில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகர பகுதியில் அதிகபட்சமாக 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடம்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கம்பாளையம் பகுதிக்கு அரசு பேருந்து தினமும் 2 முறை இயக்கப்ப டுகிறது. மழைக்காலங்களில் குரும்பூர் பள்ளங்களில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
இதேபோல் நேற்று இந்த கனமழையால் சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சக்கரை பள்ளம் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர்.
இந்நிலையில் காய்கறி லோடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. டிரைவரால் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கயிறு கட்டி சரக்கு வாகனத்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். இந்த பகுதி மக்கள் நீண்ட வருடமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிககனத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருள்வாடி, சூசைபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கெட்டவாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மழைநீர் வடிந்த உடன் போக்குவரத்து சீரானது.
இதேபோல் ஆசனூர், திம்பம், அரேபாளையம் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அரேபாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் வலுவிழந்து காணப்பட்ட மூங்கில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.