என் மலர்
தமிழ்நாடு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை
- அக்னி நட்சத்திரத்தின் பெரும்பாலான நாட்கள் மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
- வேலூரில் நேற்று அதிகபட்சமாக 106.4 டிகிரி திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 100.2 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயில் கோரத்தாண்டவம் ஆடும். கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் நிறைவடைந்தது. ஆனாலும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கும் முன்பே 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது.
அதன் பிறகு அக்னி நட்சத்திர நாட்களில் எதிர்பாராமல் பெய்த மழை காரணமாக வெயில் உச்சத்தில் இருந்து பொதுமக்கள் தப்பினர்.
அக்னி நட்சத்திரத்தின் பெரும்பாலான நாட்கள் மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெயில் பாதிப்பு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக வெயில் அளவு 100 டிகிரியை கடந்து வாட்டி வதைக்கிறது. இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள் தூங்க முடியாமல் படாதபாடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் நேற்று அதிகபட்சமாக 106.4 டிகிரி திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 100.2 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. காலை 11 மணியிலிருந்து வெயில் பாதிப்பு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று காலையில் இருந்தே சுட்டெரித்த கோடை வெயிலுக்கு ஆறுதல் தரும் வகையில் மாலை 5 மணியளவில் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திடீரென மேகம் மந்தமாக காணப்பட்டது.
தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் வேலூர் காட்பாடி, கே.வி குப்பம், ஒடுகத்தூர் என பரவலாக காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
குடியாத்தம் அடுத்த செண்டத்தூர் கிராமத்தில் இடிதாக்கி 2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து கருகி நாசமானது. தட்டப்பாறை கிராமத்தில் வீட்டில் இருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. அணைக்கட்டு அருகே அகரம் நெடுஞ்சாலையில் இருந்த புளிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மாதனூர் அருகே உள்ள பாலூர் ஊராட்சி பட்டுவாண்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சரஸ்வதி (வயது 45) என்பவர் நேற்று இரவு 8 மணிக்கு தனது விவசாய நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சரஸ்வதி அண்ணாமலை என்பவரது விவசாய நிலத்தின் பழமையான மாட்டுக்கொட்டகையில் ஒதுங்கி இருந்தார்.
அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பழமையான மரம் ஓன்று மாட்டுக் கொட்டகை மீது சாய்ந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சரஸ்வதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆம்பூர் தாலுகா போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மாலை 5 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.