என் மலர்
தமிழ்நாடு
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
- மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
- தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.