என் மலர்
தமிழ்நாடு
இந்து கடவுள்கள்-முஸ்லிம்கள் தொடர்பு குறித்து வரலாற்று புத்தகம்: அமைச்சர் தகவல்
- ஈரோடு காவல் தெய்வமாகவே ராவுத்தர் இருக்கின்றார்.
- எம்மதமும் சம்மதமே என்று சொல்லுகின்ற இந்த ஆட்சியில் இந்த நல்லுறவு பேணிக்காக்கப்படும்.
சென்னை:
சட்டசபை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, இந்து கடவுள்களும், இஸ்லாமியர்களும் எப்படி இணக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறநிலையத்துறை சார்பாக புத்தகம் வெளியிட முடியுமா? என்றார்.
அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது:-
பல நூறாண்டுகளை கடந்து இஸ்லாமியர்கள், இந்துக்களுடன் நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்படுகின்ற கோவில்கள் தமிழகத்தில் 20 இருக்கின்றன. இந்த நடைமுறைகளை தகர்க்க வேண்டும்., மக்களிடையே மதவாதத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு முற்படுகின்ற சக்திகளை வீழ்த்துகின்ற சக்திதான் திராவிட மாடல் ஆட்சி.
விழுப்புரத்தில் படே சாயுபு திருக்கோவில் இருக்கின்றது. அங்கு இந்துக்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும்தான் மரியாதை. அது இருவரும் சேர்ந்து தொழுகின்ற இடமாக இருக்கின்றது. அதேபோல் ஈரோடு காவல் தெய்வமாகவே ராவுத்தர் இருக்கின்றார். ராவுத்தரை தொழுதுவிட்டு தான் அடுத்து இந்து கோவில்களை இந்து சாமிகளை தொழ வேண்டும். அதேபோல புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தேர்வலம் என்பது முதலில் அதை தொட்டு வணங்கி ஆரம்பித்து வைப்பது இஸ்லாமிய நண்பர்கள் தான். அதன் பிறகுதான் தேர்வடமே புறப்படும். அதேபோல் ஈரோட்டில் ஒரே கருவறையில் இரண்டு ராவுத்தர் சிலைகளும் நடுவில் முருகரும் உள்ளனர்.
எம்மதமும் சம்மதமே என்று சொல்லுகின்ற இந்த ஆட்சியில் இந்த நல்லுறவு பேணிக்காக்கப்படும். இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து மதத்திற்கும் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வரலாற்றையும் எடுத்து புத்தகமாக தொகுத்து, வெளியிடுவதற்கு முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செல்வப்பெருந்தகை, 'ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வி.ஆ.பி.சத்திரம் ராமானுஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, 'ராமானுஜர் கோவில் ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கின்ற 48 குடும்பங்களுக்கு நிச்சயமாக மறுவாழ்வு தந்த பிறகுதான் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்' என்று கூறினார்.