search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு
    X

    ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு

    • ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

    ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், நூடுல்ஸ், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் டிரிங்ஸ் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவினில் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    15 மில்லி நெய்யின் விலை 14 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் ,100 மில்லி நெய்யின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    200 மில்லி நெய் பாட்டில் 145 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் 500 மில்லி நெய் பாட்டில் 315 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், 15 கிலோ டின் நெய்யின் விலை 10,725 ரூபாயில் இருந்து 11880 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் வெண்ணெயின் விலையானது 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயில் இருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×