என் மலர்
தமிழ்நாடு
ஈஷா விவகாரம்: 3 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?- சட்டசபையில் அமைச்சரை கடிந்து கொண்ட துரைமுருகன்
- பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது.- அமைச்சர் மதிவேந்தன்
தமிழக சட்டசபையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஈஷா தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது சக அமைச்சரையே லேசாக கடிந்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. கோவையில் ஈஷா யோகா மையத்திற்கான இடமானது யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா? என்ற கேள்வியால் இந்த சம்பவம் நடைபெற்றது.
இன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது,
காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானா "யானை வழித்தடங்களை பற்றி வனத்துறை அமைச்சர் பேசினார். பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள். யானைகள் கடந்து செல்லும் இடம் (Elephant Crossing) போடுவதில்லை. கோவை ஈஷா யோகாவில் யானை வழித்தடங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் "யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது. குறைந்த அறிவுதான் இருக்கிறது. இதெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மானியத்தில் பேசுகிறேன். இதற்காக முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, யானைகள் தொடர்பான நிபுணர்களை (Elephant experts) வைத்து தீவிரமாக ஆய்வு பண்ணதுக்கு அப்புறம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும். அதனால் அவசரப்பட்டு எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம்"
அப்போது அவை முன்னவரான துரைமுருகன் திடீரென எழுந்து சபாநாயகர் அனுமதியுடன் "யானைகள் வழித்தடத்தை பற்றி சொன்னீர்கள். ஆனால் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இடங்களை எல்லாம் தானாக பிடித்து கொண்டு கட்டடம் கட்டி கொண்டு யானைகள் வழித்தடத்தை தடுத்திருக்கிறார்கள். ஈஷாவில் உங்களின் அனுமதியை பெற்றுதான் கட்டடங்கள் கட்டினார்களா? யானைகள் வழித்தடத்தை பிடித்து கொண்டது உண்மையா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கை வைத்திருக்கிறார்களா, இல்லையா?" அதற்கு நேரடியாக பதில் கேட்கிறார் என்றார்.
அதற்கு அமைச்சர் மதிவேந்தன் "அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார். யானைகள் வழித்தடங்களை பற்றி தெளிவுபடுத்துவதற்கு தான் இந்த முயற்சி. ஈஷா விவகாரத்தில் என்னென்ன விவரங்கள் என்று தெரிந்து கொண்டுதான் சொல்ல முடியும். அதை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் சொல்கிறேன்" என்றார்.
இந்த விவாதத்தை பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருந்து என்று கூறப்பட்டாலும் சக அமைச்சரை கடிந்து கொண்டார் என பேசப்படுகிறது.