என் மலர்
தமிழ்நாடு

கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மாரத்தான்

- இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பதிவு கட்டணம் ரூ.3.42 கோடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை:
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக சென்னையில் இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தீவுத்திடலில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ₨1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது என்று கூறிய அவர், இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என்றார்.
இந்த மாரத்தான் போட்டியில் 73206 நபர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உலக சாதனை குழுவினர் வழங்கினர்.
மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கும் வகையில், காசோலையை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.