என் மலர்
தமிழ்நாடு
பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா- காப்பு கட்டுதலுக்கு பிறகு நடை அடைப்பு
- கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பழனி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
பழனி:
முருகபெருமானின் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா இன்று மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை செய்யப்பட்டு அதன் பிறகு மூலவர், உற்சவர், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.
இதற்காக பழனி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. கந்தசஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களும் கோவில் யானை மலைக்கோவிலிலேயே தங்கி இருக்கும்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சூரியகிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன் பின் இரவு 7 மணிக்கு சம்ப்ரோக்ஷன பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் தங்க ரத புறப்பாடு நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் 7 நாட்களும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தங்க சப்பரம், வெள்ளி காமதேனு, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுக சூரன் மற்றும் சூரபத்மன் ஆகியோரை முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
மறுநாள் காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.