என் மலர்
தமிழ்நாடு

பெண்களை வீட்டிற்குள் அடைத்து ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து விழா

- விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு பகுதி மக்களின் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊரைக்காக்கும் மந்தை முனியப்பன் கோவிலுக்கு கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர் மந்தையில் முனியப்ப சாமிக்கு கிடாய்வெட்டி சமையல் செய்து படையல் போடப்பட்டது. அதன் பின்னர் கிராமத்தின் 4 பகுதிகளிலும் கோவில் பூசாரியான சந்திரன் என்பவர் கறிச்சோற்றை கலந்து அருள்வந்து ஆடி வானத்தை நோக்கி வீசினார்.
அவ்வாறு வீசப்படும் கறி சோறை முனியப்ப சாமி பிடித்துக்கொள்வார் என்பதும், ஒரு பருக்கை கூட கீழே விழாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் பின்னர் ஆண்கள் அனைவரும் சாமிக்கு படையல் இடப்பட்ட அசைவ உணவை சாப்பிட்டனர். இரவு 9 மணிக்கு தொடங்கி இந்த திருவிழா அதிகாலை 3 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.