என் மலர்
தமிழ்நாடு
கொடைக்கானல் அருகே காட்டுச்சேவல் வேட்டையாடிய கும்பல்- கள்ளத்துப்பாக்கியுடன் கைது
- சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர்.
- கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் வனப்பாதுகாப்பு படைக்குழு உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசனுக்கு கொடைக்கானல் மலை கிராமங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரேஞ்சர் கிருஷ்ணகுமார், வனவர் ராஜேஷ்கண்ணன், வன காப்பாளர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் தாண்டிக்குடி-பண்ணைக்காடு ரோட்டில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினர். ஜீப்பில் இருந்த பண்ணைக்காட்டை சேர்ந்த கருணாகரன் (வயது40) என்பவர் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பி ஓடினார். கூடம் நகரை சேர்ந்த சந்திரன் (44), பண்ணைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி (43) ஆகியோர் நாட்டு துப்பாக்கியுடன் சிக்கினர். ஜீப்பில் சோதனையிட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்ட காட்டுச்சேவல், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாட பயன்படுத்திய கத்தி, டார்ச் லைட், சுருக்கு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னர் தப்பி ஓடிய கருணாகரனையும் வனத்துறையினர் பிடித்தனர். 3 பேரும் பெரும்பள்ளம் ரேஞ்சர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொடைக்கானல் வனப்பகுதியில் இதுபோல கள்ளத்துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி நடத்தி இதுபோன்ற கும்பலை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.