என் மலர்
தமிழ்நாடு
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை- போலீசார் விசாரணை
- பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (35). இவர் வெளியூரில் போர் போடும் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார். ராமரிடம் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் நானும் உன்னுடன் வேலை வருகிறேன் எனக்கு முன் பணம் வாங்கித் தருமாறு ராமரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து ராமர் தான் வேலை பார்க்கும் போர்வெல் நிறுவனத்திற்கு கண்ணனை அழைத்து சென்று முன் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கண்ணன் வேலைக்கு சரியாக வராமல் வேறு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனால் கண்ணன் பெற்ற முன் பணத்தை ராமர் போர்வெல் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். பின்னர் ராமர் முன் பணத்தை கொடுக்குமாறு கண்ணனிடம் கேட்டுள்ளார். இத்தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு ராமர் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது கண்ணன் வீட்டிற்கு சென்று நீ கொடுக்க வேண்டி பணத்தை நான் கொடுத்துவிட்டேன் எனக்கு பணத்தை எனக்கு கொடு என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணனின் தம்பி மாதேஷ் (30) மது போதையில் ராமர் வீட்டின் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தையில் ராமரை பேசியுள்ளார். என் அண்ணன் பணத்தை திருப்பி தரமாட்டான். என்ன வேண்டுமாலும் செய்துகொள் எனக் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ், ராமரை சாலையின் நடுவே தள்ளிவிட்டு கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார். இதில் ராமர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
உடனடியாக பகுதி மக்கள் ராமரை ஜிப்பின் மூலம் மீட்டு குன்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.