என் மலர்
தமிழ்நாடு
சேலம் அருகே ஏரி நிரம்பியது- 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி 80 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.
- வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியதால், சுற்றுவட்டார மக்கள் ஏரியை பாா்வையிட ஆா்வமாக வந்து செல்கின்றனா்.
சேலம்:
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சேலம் பனங்காடு அருகே ஆண்டிப்பட்டி சத்யாநகர் பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது.
இங்கிருந்து வெளியேறும் உபரிநீரானது ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதில் வீட்டிலிருந்த உணவுப்பொருட்கள், உடமைகள் மற்றும் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் என அனைத்தும் நீரில் நனைந்து நாசமாகின. சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரையும், அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைப்பதற்காக முகாம்கள் அமைத்து உள்ளது. மருத்துவ பரிசோதனை முகாம்களும் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊருக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்று தேவையான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மாவட்டத்தை பொறுத்தவரை, தம்மம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, ஆனைமடுவு, எடப்பாடி, ஏற்காடு, மேட்டூர் ஆகிய பகுதியில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதில், தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆத்தூர்-16, ஆணைமடுவு-9, ஏற்காடு-5.2, வீரகனூர்-5, பெத்தநாயக்கன்பாளையம்-4, மேட்டூர்-3.2, கெங்கவல்லி-2.2, சேலம்-0.8 என மொத்தம் 81.40 மில்லிமீட்டர் பதிவானது.
கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி 80 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக இந்த ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது. ஏரியின் உபரிநீரால், மலைவாழ் கிராமங்களான வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரங்களில் 548 ஏக்கா் நிலங்கள் பலனடையும்.
வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியதால், சுற்றுவட்டார மக்கள் ஏரியை பாா்வையிட ஆா்வமாக வந்து செல்கின்றனா். இருப்பினும் ஏரியில் யாரும் குளிக்க செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கெங்கவல்லி போலீசாரும் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.