என் மலர்
தமிழ்நாடு
மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை- 50 போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி
- சில கைதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்த செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை:
மதுரை புது ஜெயில் ரோட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு 2500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடம் சமீப காலமாக செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தன. இதையடுத்து தீவிரமாக சிறை துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அவ்வப்போது சோதனை நடத்தப்படும்போது சில கைதிகளிடம் செல்போன், சிம் கார்டு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்குவது வழக்கம். இன்று ஒரே நேரத்தில் சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில கைதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கைதிகளிடம் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது சில கைதிகள் போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
ஆனாலும் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்த செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். எந்த அதிரடி சோதனையால் மதுரை சிறை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.