என் மலர்
தமிழ்நாடு
மதுரையில் ஷாரிக் பதுங்கி இருந்தது எங்கே? தொடரும் மர்மம்- போலீசார் திணறல்
- மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
- ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மதுரை:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ந்தேதி குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய ஷாரிக் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கும் மற்றும் கேரளாவுக்கும் சென்று திரும்பியது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஷாரிக் சென்ற இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அவன் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் கவுரி அருண்குமார் என்ற பெயரில் நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான்.
அதன் பின்னர் அவன் மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் வந்துள்ளான். இதன்பிறகு நாகர்கோவிலுக்கு சென்ற ஷாரிக் அங்கு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் 'பிரேம்ராஜ்' என்ற பெயரில் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி இரவு வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான். இதுவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் ஷாரிக் மதுரை வந்து எங்கு தங்கினான்? என்பது இன்று கண்டுபிடிக்கப்படவில்லை. அவன் பதுங்கியிருந்த இடம் மர்மமாக உள்ளது. அதுபற்றி தெரியாத அளவுக்கு அவனுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளனர்.
அவனுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் யார்? யார்? என்பதும் தெரியவில்லை. இதனை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். போலீசார் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மர்மமான இடத்தில் ஷாரிக்கை தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அவன் நவம்பர் 6-ந் தேதி நள்ளிரவு வந்துள்ளான். அவன் 8-ந் தேதி மதியம் வரை தங்கியிருந்து உள்ளான். இருந்தபோதிலும் ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தற்போது தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய உளவுத்துறை 'மதுரைக்கு வந்து சென்ற ஷாரிக் போலீசாரால் எளிதில் அணுக முடியாத இடத்தில் தங்கி இருந்துள்ளான். இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. மதுரையில் தங்கியிருந்த ஷாரிக் பற்றி இன்னும் முழுமையாக அறியமுடியவில்லை. இதில் உண்மையை கண்டுபிடிப்பதில் உளவுத்துறை அதிகாரிகள் முழு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.