search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஷாரிக் குறித்து நாகர்கோவிலில் 24 மணி நேரம் விசாரித்த மங்களூரூ போலீசார்
    X

    ஷாரிக் குறித்து நாகர்கோவிலில் 24 மணி நேரம் விசாரித்த மங்களூரூ போலீசார்

    • நாகர்கோவிலில் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கும் ஷாரிக் பேசி உள்ளான்
    • நாகர்கோவில் விடுதியில் தங்கியிருந்தபோது ஷாரிக், கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது ஏன்? என்பது தொடர்பாக அந்தப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்தனர்.

    நாகர்கோவில்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரூ குக்கர் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக் என்ற முகமது ஷாரிக், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவனைப் பற்றி போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக் தமிழகம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோவை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் அறை எடுத்து தங்கிய அவன், கேரளாவுக்கும் சென்று உள்ளான்.

    பிரேம்ராஜ் என்ற பெயரில் போலி முகவரி கொடுத்து அவன் தங்கி உள்ளான். மேலும் நாகர்கோவிலில் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கும் ஷாரிக் பேசி உள்ளான். எனவே அவன் நாடு முழுவதும் சதி செயலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என மங்களூரூ போலீசார் கருதினர்.

    இது தொடர்பாக கோவை, மதுரையில் விசாரணை நடத்திய அவர்கள், நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து பேசிய பின்னர், மாவட்ட போலீசாருடன் இணைந்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே ஷாரிக் தங்கிய விடுதிக்குச் சென்ற போலீசார், அவன் எப்போது வந்து தங்கினான்? எத்தனை நாட்கள் தங்கி இருந்தான், அப்போது அவனை சந்திக்க வந்தது யார்? என்பது தொடர்பாக, விடுதி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவிலில் ஷாரிக்குடன் போனில் பேசியதாக ஏற்கனவே குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்திய அசாம் வாலிபரிடமும் மங்களூரூ போலீசார் விசாரணை நடத்தினர். நாகர்கோவில் விடுதியில் தங்கியிருந்தபோது ஷாரிக், கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது ஏன்? என்பது தொடர்பாக அந்தப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்தனர்.

    நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு விசாரணை தொடங்கிய அவர்கள், நேற்று பகல் 11 மணி வரை குமரி மாவட்டத்தில் மொத்தம் 24 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள், கேரள மாநிலம் புறப்பட்டுச் சென்றனர்.

    Next Story
    ×