search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெட்ரோ ரெயில்: 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
    X

    மெட்ரோ ரெயில்: 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

    • சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது.
    • ​அயனாவரம் மற்றும் ஓட்டேரிக்கு இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும்.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன்அமைக்கப்படவுள்ளன.

    வழித்தடம் 4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன.

    வழித்தடம் 5 மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன.

    வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லி (S-81) வழித்தடம் 3-ல் (up line) 11.07.2023 அன்று அயனாவரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 903 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று 29.08.2024 ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. TU-01 ஒப்பந்தத்தின் கீழ் Tata Projects நிறுவனத்தால் இதுவரை 6 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது.

    அயனாவரம் மற்றும் ஓட்டேரிக்கு இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லியின் முதல் 500 மீட்டர் சுரங்கப்பாதை இயக்கம் கூர்மையான 220 மீட்டர் ஆரம் வளைவுடனும், கடைசி 200 மீட்டர் சுரங்கப்பாதை இயக்கம் 280 மீட்டர் ஆரம் வளைவுகளுடன் பணியை நிறைவு செய்தது. மேலும், இந்த சுரங்கப்பாதை இயக்கமானது, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.

    இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் கொல்லி வெங்கட ரமணா (சுரங்கப்பாதை கட்டுமானம்), டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அல்பர் வாஹித் யில்டிஸ், பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் நாயுடு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடாப் ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

    Next Story
    ×