search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
    • பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரத்து 626 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. இதனால் நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று அதிகாலை அணை முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடியும் என மொத்தம் 28 ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் இனி வரும் நாட்களில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதையடுத்து 16 கண் மதகையொட்டி உள்ள பகுதிகளான தங்க மாபுரி பட்டணம், அண்ணா நகர், பெரியார் நகர் உள்பட பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே நடப்பாண்டில் கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதை தொடர்ந்து 70 நாட்கள் 120 அடியாகவே கடந்த செப்டம்பர் 23-ந் தேதி வரை 120 அடியாக நீர்மட்டம் இருந்தது.

    பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் நேற்று முன்தினம் 118.71 அடியாக குறைந்தது. நேற்று நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் இன்று அதிகாலை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×