என் மலர்
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 148 கன அடியாக அதிகரிப்பு

- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
சேலம்:
தமிழகம்-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து பெங்களூரு நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும், தமிழகத்திற்கும் சேர்த்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
நேற்று காலை விநாடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 148 கன அடியாக வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 62.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியானது. நீர் இருப்பு 26.38 டி.எம்.சி.யாக உள்ளது.