என் மலர்
தமிழ்நாடு

கிரிவலப்பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி. அருகில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ்.
திருவண்ணாமலை தீப திருவிழா- கிரிவல பாதையில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

- பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
- அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கு தடையின்றி பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
கார்த்திகை தீப திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும், பஸ் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும், வெளியூர் சென்ற பஸ்கள் திரும்பி வருவதில் தாமதம் என்ற நிலை இருக்கக்கூடாது.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கு தடையின்றி பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் வாகனங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும், மலையேறும் 2,500 பக்தர்களுக்காக 3 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கிரிவலப் பாதையில் உள்ள ஈசானிய மைதானம், அடி அண்ணாமலை, வருணலிங்கம் உள்ளிட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.