என் மலர்
தமிழ்நாடு
பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது- கோட்பாடும் தெரியாது: அமைச்சர் கீதாஜீவன்
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள்.
- தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் காய்கறி மாா்க்கெட் அருகில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாா்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. அரசை பற்றி தவறான தகவல்களை மாற்றுக் கட்சியினர் பரப்பி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளை உண்மையாக செய்யவில்லை.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் குட்டையை கிளப்பி மீன் பிடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் பொதுமக்களை குழப்புகிறார்கள்.
தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.
தமிழகத்தில் நம் உரிமைகளை ஆதிக்க சக்தியிடம் அடிமைப்பட்டு இருந்ததை பாரதி, பெரியார் போன்ற பல்வேறு தலைவர்கள் முயற்சியால் தமிழகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
தி.மு.க.வினர் என்றும் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.
வடமாநிலங்களில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்படவில்லை. தமிழகத்தில் வேண்டாதவர்கள் எல்லாம் வந்து ஆட்டம் போடுவதற்கு காரணம் எடப்பாடி பழனி சாமிதான் .
இவ்வாறு அவர் பேசினார்.