search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
    X

    எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்

    • நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது.
    • ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது.

    கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று நடந்தது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.489 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு 223 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டங்களுக்கெல்லாம், நான் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளின் பின்னால் இருக்கிற நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து, வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் இதுவரை 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களின் முகங்களை நான் பார்க்கிறேன்.

    நீங்கள் மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். உங்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கிறபோது பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

    பொள்ளாச்சி என்றாலே கவிஞர் மருதகாசி எழுதிய பாடல்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதிலும் இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கிற இளைஞர்களிடம்கூட அவரது அந்த பாடல் போய் சேர்ந்திருக்கிறது. 'பொதியை ஏற்றி வண்டியில, பொள்ளாச்சி சந்தையில, விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் விற்று போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு' என்ற இந்த பாடல் பொள்ளாச்சியின் வர்த்தக பெருமையை சொல்கிறது. அப்படிப்பட்ட இந்த பொள்ளாச்சி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு 4 முறை வந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு ரூ.1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறேன். இன்று 5-வது முறையாக வந்திருக்கிறேன்.

    இது அரசு நிகழ்ச்சியா? அல்லது ஒரு பெரிய மண்டல மாநாடா? என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள 4 மாவட்ட அமைச்சர்களுக்கும், 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களு டன் முதல்வர் திட்டம், இதற்கெல்லாம் முத்தாய்ப் பாய் நீங்கள் நலமா திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    நமது திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த ஒவ்வொருவரையும் செல்போனில் அழைத்து முதலில் நீங்கள் நலமா? என்று கேட்கிறேன். பின்னர் திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா? என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா? என்று கேட்கிறேன். கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல் கடைக்கோடியில் இருக்கும் மக்களிடமும் பேசுகிற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான்தான்.

    இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன் நான். உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் காது கொடுத்து கேட்பவன் நான். உங்கள் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உழைக்கிற முதலமைச்சர் நான். அதனால்தான் நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி இருக்கிறேன். இப்படி சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதால் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் உயருகிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதார வளம் வளருகிறது.

    ஒட்டுமொத்த தமிழ்நாடு முன்னேறுகிறது. அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர் சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது.

    நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. அதன் அடையாளம்தான் நீங்கள் திரண்டு வந்திருக்கும் காட்சி.

    நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடும் போது லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள். அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

    10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியல் போட்டு சொல்ல முடியுமா? மேற்கு மண்டலத்தை தங்கள் கோட்டை என்று சொன்னார்கள். வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா? இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தனர்.

    அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது இந்த பொள்ளாச்சி சம்பவம். மறந்து விட முடியுமா? பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து தைரியமாக அ.தி.மு.க. ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள். தி.மு.க. மகளிர் அணி சார்பில் தான் போராட்டம் நடத்தினார்கள். பிறகு நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படக்கூடிய வேடிக்கையை பார்த்தார்கள்.

    அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி ஏதும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றார். அப்போது நான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இதை சும்மா விட மாட்டேன் என்று சொன்னேன். நிச்சயமாக இதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என்று அப்போதே உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்து விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிய கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டு இருக்கிற நிலையில் அந்த பெண்ணின் பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது.

    ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது. அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில். பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது யார் ஆட்சியில்? கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சர், டி.ஜி.பி. இருந்தனர். அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான் இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்ற, பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். டிராமா நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அ.தி.மு.க., பா.ஜ.க. கள்ளக்கூட்டணி ஒரு பக்கம் என்றால், தமிழ்நாட்டை வளமாக்க, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இன்னொரு பக்கம் ஜனநாயக சக்திகளும், தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம். ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை, திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கிற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை இந்த தி.மு.க. செய்யும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.

    நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள்.

    பிரதமர் மோடியே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன? இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கொடுத்தீர்களே அந்த கதி என்ன? அதை பிரதமர் சொல்ல வேண்டும்.

    அடுத்த வாரத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. தமிழ் நாட்டுக்கு செய்து கொடுத்திருக்கிற சிறப்பு திட்டங்களை பட்டியல் போடுங்கள். என்ன சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் கேட்கணும். பதில் சொல்லுங்கள் பிரதமரே என்று எல்லோரும் கேட்கணும்.

    போனமுறை வந்தபோது பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது என்று சொன்னார். நீங்கள் அண்ட புளுகு ஆகாச புளுகு என்று ஒரு பழமொழி கேட்டு இருப்பீர்கள். இது மோடி புளுகு. அதை நம்பாதீர்கள். அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு.

    எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ம் ஆண்டு அறிவித்தீர்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் தடுத்தாரா? இல்லையே. அடுத்து உங்கள் நண்பர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். நாங்கள் தடுத்தோமா? இல்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே. உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த 10 வருடமாக தமிழ்நாட்டை திரும்பி பார்க்காமல், தேர்தலுக்கு முன்பு 10 நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் இளிச்சவாயர்களா? பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும் தான் பா.ஜ.க.வின் உயிர் மூச்சு.

    இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது. மாநிலத்தை கெடுத்த அ.தி.மு.க, மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க., இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலுக்கு நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண நாட்டின் மொத்த இந்திய மக்களும் தயாராகி விட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். தமிழ்நாட்டை உயர்த்துவோம். இந்தியாவை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×