என் மலர்
தமிழ்நாடு
குடியரசு தலைவருக்கே மரியாதை அளிக்காமல் நிற்க வைப்பதுதான் மோடியின் சமூக நீதி- நடிகை ரோகிணி
- அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார்.
- பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை.
கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பா.ஜ.க. கூறுவது எந்த விதத்தில் நியாயம். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் போது நம் நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. அரசுக்கு ரூ.பல கோடி மதிப்பில் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு உடனடியாக தரச்சான்று வழங்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. எனவே இது போன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் வெற்றிபெற வைப்பதன் மூலம் நாம் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.