என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்வு பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/19/1778838-courtallamfalls.jpg)
குற்றாலம் மெயினருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்த காட்சி.
பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்வு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணை பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்துள்ளது.
இதனால் அணை நீர்மட்டம் 83.45 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 96.23 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1197.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 404.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மொத்தம் 36.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 99.50 அடி நீர் இருப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக இன்று காலை முதலே அருவிக்கரைகளில் குவிந்தனர்.
![sidkick sidekick](/images/sidekick-open.png)