search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு- குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X
    குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு- குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து சாரல் மழை கொட்டி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 1195.26 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்தது. சேர்வலாறு அணை பகுதியில் 39 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1585 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்கிறது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. புறநகரில் கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் அடித்தது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, தென்காசி, சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அடவிநயினார் அணையில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 8 மில்லிமீட்டரும், கடனாநதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×