என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்குள் வழிபட முயன்ற பட்டியலின மக்கள்- போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டம் பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்குள் வழிபட முயன்ற பட்டியலின மக்கள்- போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/07/1946093-26.webp)
பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்குள் வழிபட முயன்ற பட்டியலின மக்கள்- போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
- கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 30 வருடங்களாக பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் இருதரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ.மற்றும் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.
இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் தாம்பூல தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் அம்மனை வழிபட விடுங்கள் என கூறி கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது, அதனால் யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி மற்றும் ஆர்.டி.ஓ. சரவணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.