search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    50-ம் ஆண்டு நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் - தலைவர்கள் மரியாதை
    X

    50-ம் ஆண்டு நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் - தலைவர்கள் மரியாதை

    • பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • கி.வீரமணி தலைமையில் அமைதிப் பேரணியாக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தனர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 50-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மேயர் பிரியா, மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், பரந்தாமன், எபிநேசர், பகுதி செயலாளர் மதன்மோகன், புழல் நாராயணன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    திராவிடர் கழகம் சார்பில் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவருடன் கட்சியின் துணைத்தலைவர் கலி பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ், பொருளாளர் குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து வணங்கினார்கள்.

    பின்னர் கி.வீரமணி தலைமையில் அங்கிருந்து அமைதிப் பேரணியாக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தனர். அங்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அங்கு பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் வேப்பேரியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து பெரியார் திடலுக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்நிகழ்வில் மாநில செயலாளர் விஜயசேகர் சர்க்கிள் தலைவர்கள் எம்.டி.சூர்யா, சி.பி.நரேஷ்குமார், நிலவன், உமாயிலன், ஆர்.டி.குமார், சிவாலயா ஜாபர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்துக்கும், எம்.ஜி.ஆர். படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம், மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் எல்.கே.சதீஷ், பார்த்தசாரதி, உயர்மட்டகுழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×