என் மலர்
தமிழ்நாடு
நள்ளிரவில் முயல் வேட்டைக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
- இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது.
- முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அலப்பளாச்சேரி கிராமம். இதனையொட்டி இடையபட்டி கண்மாய் பகுதியில் ஏராளமான முயல்கள் வளைதோண்டி அதில் வசித்து வருகின்றன. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி வேட்டைக்கு சென்று பிடித்து வருவது வாடிக்கையாகும்.
இந்த நிலையில் அலப்பளாச்சேரியை சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்த் (வயது 17), அவரது நண்பர்கள் இடையபட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் கருப்பசாமி (21), மணி மகன் மனோஜ்குமார் (24) மற்றும் சிலர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் முயல் வேட்டைக்காக புறப்பட்டு சென்றனர். கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்துவரும் பலத்த மழையால் கண்மாய்க்குள் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே அவர்கள் இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு எழுந்தனர். பின்னர் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். அப்போது கண்மாய்க்குள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் மூச்சு, பேச்சின்றியும், மனோஜ்குமார் காயங்களுடன் முனகியவாறும் கிடந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த கிராம மக்கள் 3 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனோஜ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அதேபோல் இறந்த கருப்பசாமிக்கு திருமணமாகி சோலையம்மாள் என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முயல் வேட்டைக்கு சென்றவர்கள் மழை காரணமாக மின்சாரம் பாய்ந்து பலியானார்களா? அல்லது ஏற்கனவே வேட்டைக்காக யாராவது வைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரவோடு இரவாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அங்கு இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.