என் மலர்
தமிழ்நாடு
வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை மக்களிடம் நேரில் கேட்டு தடுக்க நடவடிக்கை- அமைச்சர் களத்தில் இறங்கினார்
- ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
- நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் மழை காலங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த முறை வெள்ளப்பெருக்கால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது, மழை பாதிப்புகளில் மக்கள் சிரமப்படக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும், பொதுமக்களிடம் கள நிலவரத்தை நேரில் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளவும் புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு களத்தில் இறங்கினார்.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நேற்று அடையாறு மண்டலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கியமாக அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அந்த பகுதிகளில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனே பொதுமக்கள் எந்தெந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன, இந்த முறை எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.
உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், 'பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இன்னும் 2 நாட்களில் சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் மழைநீர் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மண்டலத்தில் கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பின் இங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து விளக்கமாக தெரிவித்து உள்ளோம்.
முக்கிய நீர் நிலைகள் இந்த மண்டலத்தில் உள்ளது. 98 சதவீதம் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது. பழுது ஏற்பட்டுள்ள சாலைகளை விரைவில் போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பொதுமக்களும், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உள்ள பாதிப்புகளை தெரிவித்தனர். அதனை சரி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் இங்கு இருந்ததால் அவர்களும் 2 நாட்களில் நேரடியாக சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை முடிவடையும் நிலையில் உள்ளது. பணிகளை முடிக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழை நீரை சமாளிப்போம், வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மதுரவாயல் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி கோடம்பாக்கம் மண்டலத்திலும், 17-ந்தேதி பெருங்குடி மண்டலத்திலும், 18-ந்தேதி சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் ஆய்வுக்கூட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்துகிறார்.